search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோக்ஆயுக்தா சட்டம்"

    புதுவையிலும் லோக்ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதிபட கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:-

    லோக்பால் சட்டத்தை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு 2013-ல் கொண்டு வந்தது.

    இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் லோக் பால் சட்டத்தை இயற்றி முதல்-அமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வழி உள்ளது.

    நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் லோக்ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழகத்தில் லோக்ஆயுக்தா சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இச்சட்டத்தின் மூலம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல், முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க வழி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று தமிழகத்தில் இந்த சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் புதுவை அரசு இந்த தீர்ப்பை ஏற்காதது வியப்பளிக்கிறது.

    நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் என கூறும் புதுவை காங்கிரஸ் அரசு புதுவையிலும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவர அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை புதுவை காங்கிரஸ் அரசு கொண்டுவராதது துரதிருஷ்டவசமானது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதிலளித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-


    மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறினாலும் மக்களவையில் நிறைவேறவில்லை. இதனால் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு இந்த சட்டம் அனுப்பப்பட்டு உள்ளது.

    சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி பல்வேறு மாநிலங்களில் லோக்ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவையிலும் லோக்ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் என்பதால் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.

    ஏற்கனவே டெல்லியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் விளக்கம் பெற்ற பிறகு லோக்ஆயுக்தா சட்டம் புதுவையிலும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Lokayukta
    ×